செல்லப்பிராணிகள் மீது பிரபலங்கள் பலரும் தனி அன்பு காட்டுவது வழக்கம். அந்த வகையில், செல்லப் பூனையை ஆசையாக வளர்த்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், உடல்நலப் பிரச்னை காரணமாக அதனை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்புடன் பாடலிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
விஜயுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ஆசையாக வளர்த்து வந்த தனது செல்லப் பூனை தொடர்பான வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பூனையை வீட்டிற்கு அழைத்து வந்த இரண்டு நாட்களிலேயே அவரது முகம் முழுவதும் கடுமையான தடிப்புகள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முதலில் அதிகமாக மாம்பழம் சாப்பிட்டதால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என நினைத்ததாகவும், பின்னர் தோல் மருத்துவரை அணுகியபோதுதான் பூனையின் உரோமம் மற்றும் உமிழ்நீர் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்ததாகவும் ஸ்ருதி கூறியுள்ளார். ஒவ்வாமையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், எந்த முயற்சியும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்றும், மருந்துகள் எடுத்துக் கொண்டும் கொப்புளங்கள் குறையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி தான் மிகவும் பாசமாக வளர்த்து வந்த செல்லப் பூனையை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்ததாக ஸ்ருதி ஹாசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Also Read: விவாகரத்தான மனைவி மீது பட்டப்பகலில் ஆசிட் வீச்சு! முன்னாள் கணவரின் அதிர்ச்சி செயல்…



