ஒரு உறவில் அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தம்பதியிடையேயான நெருக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவன் – மனைவிக்கு இடையேயான நல்ல நெருக்கம் அவர்களின் உறவை வலுப்படுத்துவதோடு, மனநிலை மற்றும் உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரத்தில், உறவில் நெருக்கம் குறைந்தால் கோபம், எரிச்சல், மன அழுத்தம் மற்றும் சோகம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் ஆலோசனை உளவியலாளர் டாக்டர் பிரக்யா ராஷ்மி கூறுகையில், தம்பதியிடையே நெருக்கம் குறைவது மனநிலையையும் மனநலத்தையும் பாதிக்கக்கூடும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம் அதிகரிக்கலாம்
தம்பதியிடையே நெருக்கம் குறையும்போது மனநிலை மாற்றங்கள் மற்றும் சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்படலாம். நெருக்கமான தருணங்களின்போது ஆக்ஸிடோசின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியல் வேதிப்பொருட்கள் உடலில் சுரக்கின்றன. இவை உறவை வலுப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உணர்ச்சி ரீதியான நலனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
நெருக்கம் குறையும் போது இவற்றின் அளவு குறைந்து, மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக பதற்றம், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் சிறிய விஷயங்களுக்குக்கூட எரிச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
துணையுடன் இருந்தாலும் தனிமையாக உணரலாம்
உறவில் நெருக்கம் குறையும்போது, துணை அருகில் இருந்தாலும் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம் என டாக்டர் பிரக்யா தெரிவித்துள்ளார். இதனுடன் கோபமும் அதிகரிக்கக்கூடும்.
மேலும், உணர்ச்சிகளை சரியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம். இதனால் தனிமை உணர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சோகம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும்
நீண்ட காலமாக உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நெருக்கம் இல்லாதபோது சோகமான மனநிலை உருவாகலாம். நீண்ட காலம் துணையிடமிருந்து நெருக்கம் கிடைக்காததால் ஏற்படும் நிலை ‘Skin Hunger’ என குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாக சோகம் அதிகரிப்பதுடன், சிலருக்கு உடல் சோர்வும் ஏற்படலாம். அன்றாட செயல்களில் கூட ஆர்வம் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.
எனவே, தம்பதியிடையே நெருக்கம் என்பது உடல் ரீதியான உறவை மட்டுமல்லாமல், உணர்ச்சி மற்றும் மனநலத்துடனும் தொடர்புடையதாக இருப்பதால், உறவில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு தேவையான நேரத்தில் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: விவாகரத்தான மனைவி மீது பட்டப்பகலில் ஆசிட் வீச்சு! முன்னாள் கணவரின் அதிர்ச்சி செயல்…



