அரசியல் களத்தில் இறங்க தீவிர ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷின் நகர்வுகளையும், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் தீவிரமாக முதல்வர் விஜய் ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் கடந்த ஓராண்டாகவே அரசியல் பிரவேசம் குறித்து யோசித்து வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக தனது ரசிகர் மன்றத்தை முழுமையான அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது பிறந்த நாள் விழாவில் பிரத்யேக கொடியை அறிமுகப்படுத்திய அவர், மேடையில் மறைமுக அரசியல் கருத்துகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் அடுத்தகட்டமாக தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை விரிவுபடுத்தி, உறுப்பினர் சேர்க்கையை நடப்பு ஆண்டுக்குள்ளேயே முடிக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கோவையில் இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவரது மன்றங்கள் செய்த நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, ரத்த தானம் போன்ற அதே பாணியையே தனுஷும் பின்பற்றி வருகிறார். இளம் நடிகர்களில் தனுஷிற்கு அதிகளவில் இளைஞர் பட்டாளம் ரசிகர்களாக இருப்பதால், தொகுதி வாரியான இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் தனது அரசியல் பலத்தை அவர் கணக்கிடத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நகர்வுகள் எதிர்காலத்தில் ஆளுங்கட்சிக்கு அரசியல் ரீதியான சவாலாக உருவெடுக்கக்கூடும் என்பதால், அவரது செயல்பாடுகளை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதற்காக உளவுத்துறையில் பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர் மன்ற நகர்வுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, முதலமைச்சரின் தனிச் செயலர் ஜெகதீஷின் மேற்பார்வையில் தனுஷின் அமைப்புகள் மற்றும் அவர்களின் சமூக வலைதளச் செயல்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



