தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்தீர்மானத்தின் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழக பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலித்து, அதற்கு ஏற்ப அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய அளவிலேயே (543 தொகுதிகள்) நிலையாக பராமரிக்க வேண்டும் என்றும், இந்த எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர்… pic.twitter.com/W1FD7iDqF6
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 13, 2026
மேலும், நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைக்கும், கீழவையான மக்களவைக்கும் இடையிலான பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை 2.2 : 1 என்ற அளவிலேயே தொடரச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலிருந்தே உடனடியாக நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


