பல ஆண்டுகளாக ஆக்ஷன், எமோஷன், கமர்ஷியல் என பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது திரைப்பயணத்தில் சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியிருக்கிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வழக்கமான சூர்யா படங்களில் இருந்து மாறுபட்ட குடும்பம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா, பவானி ஸ்ரீ, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் கதாபாத்திரம் எப்படி?
படத்தில் 40 வயதைக் கடந்த சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் அவரது வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக மமிதா பைஜூவின் கதாபாத்திரம் வருகிறது. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் ஆரம்பத்தில் முக்கியமான தடையாக அமைகிறது. ஆனால், கதை அந்த ஒரு விஷயத்தை மட்டுமே மையமாகக் கொள்ளாமல், குடும்ப உறவுகள், மனிதர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என பல்வேறு தளங்களுக்கு நகர்கிறது.
சூர்யா – மமிதா கெமிஸ்ட்ரி
சூர்யாவை இதுவரை பெரும்பாலும் ஆக்ஷன் மற்றும் சீரியஸான கதாபாத்திரங்களில் பார்த்த ரசிகர்களுக்கு, இந்தப் படம் அவரது மற்றொரு பரிமாணத்தை காட்டுகிறது. சஞ்சய் கதாபாத்திரத்தில் சூர்யா இயல்பான நடிப்புடன், நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.
குறிப்பாக முதல் பாதியில் அவரது காமெடி டைமிங் மற்றும் கதாபாத்திரத்தின் இயல்பான அணுகுமுறை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சில ரசிகர்களுக்கு சூர்யாவின் முந்தைய காதல் படங்களின் நினைவுகளையும் இந்த கதாபாத்திரம் ஏற்படுத்துவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.
மமிதா பைஜூவும் படத்தில் கதாநாயகியாக மட்டுமே இடம்பெறாமல், சூர்யாவின் கதாபாத்திரத்துடன் இணைந்து பயணிக்கும் வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தின் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராதிகா சரத்குமார் கவனம் ஈர்க்கிறார்
ராதிகா சரத்குமாருக்கும் படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சூர்யா, மமிதா மற்றும் ராதிகா ஆகியோருக்கு இடையிலான காட்சிகள் கதைக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக கூறப்படுகிறது. படத்தின் குடும்பப் பின்னணியும், உறவுகளை அணுகும் விதமும் கதையின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதனால் முழுக்க முழுக்க காதல் கதையாக இல்லாமல், குடும்ப உணர்வுகளையும் இணைத்துச் செல்லும் படமாக இது அமைந்துள்ளது.
இசை எப்படி?
படத்தின் பாடல்களுடன், பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டாம் பாதியில் வேகம் குறைகிறதா?
படத்தின் முக்கிய குறையாக இரண்டாம் பாதியின் வேகம் குறித்து கருத்துகள் வெளியாகியுள்ளன. முதல் பாதி சுவாரஸ்யமாகவும், ஜாலியான காட்சிகளுடன் வேகமாக நகர்வதாக ரசிகர்கள் கூறும் நிலையில், அதே வேகத்தை இரண்டாம் பாதி தொடர்ந்து தக்கவைக்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. சில காட்சிகள் சற்று நீளமாக இருப்பதாகவும், ஒரு கட்டத்தில் கதை வழக்கமான கமர்ஷியல் சினிமா பாணிக்கு திரும்புவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், படம் முழுவதும் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும், குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு ஃபீல்-குட் திரைப்படமாக இருப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், ஆக்ஷன் மற்றும் கனமான கதாபாத்திரங்களில் சூர்யாவை பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ அவரது மென்மையான, ஜாலியான மற்றும் குடும்ப உணர்வுகள் கொண்ட மற்றொரு முகத்தை காட்டும் படமாக இருக்கிறது. முதல் பாதியின் வேகம் மற்றும் நடிப்புகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ள நிலையில், இரண்டாம் பாதியின் சற்று மெதுவான திரைக்கதை படத்தின் முக்கிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.
Also Read: உணவில் என்ன இருக்கிறது என்பதை நுகர்வோர் அறிய வேண்டும்.. 2 வாரங்களில் முடிவெடுக்க FSSAI-க்கு கெடு!



