அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 5 ராணுவ வீரர்கள் உள்பட பலர் மாயமாகியுள்ளனர்; இந்த பேரிடரில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை மற்றும் கடுமையான நீர் தேக்கத்தையும் பொருட்படுத்தாமல், அண்டை முாம்களில் இருந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள பசு பாணி ராணுவ முகாமில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், 5-வது கிரெனடியர் படைப்பிரிவின் 2 தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 7 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்; ஹவில்தார் உபேந்தர், குந்தன், வினோத், ஆதித்யா மற்றும் சமுந்தா ஆகிய 5 வீரர்கள் மாயமாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), மாநில பேரிடர் மீட்புக்குழு (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள கியோஜாரிங் – பைச்சிங் சாலைப் பகுதியில் ஆகஸ்ட் 14 அன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதுவரை பாபுல் அலி என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்சிசுக்களில் சிக்கியுள்ள மற்றவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாச்சோ காவல் நிலையத்தினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, மாநிலத்தை மிகவும் உறுதியான முறையில் மீண்டும் கட்டியெழுப்பப் போவதாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு உறுதியளித்துள்ளார். இதற்காக சாலைகள், கிராமப்புற இணைப்பு மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த 2026-29 ஆம் ஆண்டுக்கு ரூ.7,834 கோடி முதலீட்டை அவர் அறிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் அனைத்துக் சமூகங்களுக்கும் பாதுகாப்பான மற்றும் உறுதியான கட்டமைப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



