தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு செயல்படுவதற்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தினார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் மாதமாகக் கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்குடன் களப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த மாற்றத்தில் ஒவ்வொரு தனிநபரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தங்களது அமைப்பில் யாரும் தொண்டர்கள் இல்லை, அனைவருமே தலைவர்கள் என்ற சேவை மனப்பான்மையோடு செயல்படுவதாக தெரிவித்த அவர், இம்மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 1,400-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 1.06 லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு உபகரணங்களின்றி தொண்டர்கள் மூச்சுத் திணறலுக்கு மத்தியிலும் வைகை மற்றும் காவிரி நதிகளைத் தூய்மைப்படுத்தும் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், சேவை மனப்பான்மையுடன் வரும் தொண்டர்களால் மட்டுமே அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றியமைக்க முடியும் என்றார்.
அமைப்பு தொடங்கிய 73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், ஆட்களைச் சேர்க்கும் கட்டாயமின்றி மாற்றத்தை உணர்ந்து வரும் நபர்களைக் கொண்டு 50 லட்சம் பேரை இணைப்பதே தங்களின் இலக்கு என்றும், அந்த இலக்கை எட்டிய பின்னரே தங்களின் மக்கள் நல அரசியல் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் முடிவுகள் டெல்லியிலோ, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலோ அல்லது தலைவர்களின் வீடுகளிலோ தீர்மானிக்கப்படும் காலம் மாறிவிட்டதாக குறிப்பிட்ட அண்ணாமலை, அந்தந்த கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள தலைவர்கள் தங்களின் சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்போதுதான் நிலையான மாற்றம் உருவாகும் என்றார். ஆளுங்கட்சியை எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியை ஆளுங்கட்சியும் மாறி மாறிக் குறைகூறும் வழக்கமான அரசியலை விடுத்து, சமூகத்தில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் அரசியலையே தாம் முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
தற்போதைய தவெக ஆட்சியில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 154 பேர் புதியவர்களாகவும், 108 பேர் முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்களாகவும் உள்ள சூழலில், அவர்களுக்குத் தங்களின் திறமையை நிரூபிக்க ஓராண்டு காலம் அவகாசம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுங்கட்சியை உடனடியாகக் கவிழ்த்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரத் துடிக்கும் எதிர்க்கட்சிகளின் போக்கை விமர்சித்த அவர், தவறாக ஆட்சி செய்தால் அரசே தானாக கவிழும் எனவும், அவர்கள் சரியாக பணியாற்றாவிட்டால் முதல் குற்றச்சாட்டை தங்களது அமைப்பே முன்வைக்கும் எனவும் எச்சரித்தார்.
மேலும், டெல்லியில் மூன்றரை ஆண்டுகள் தங்கி முக்கியப் பொறுப்பை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தபோதும், அதைத் தாம் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார். தான் டெல்லிக்கே செல்லாத நிலையில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறுவது நகைப்புக்குரியது என்றும், எந்த கட்சியில் இருந்தாலும் தமிழர்களின் நலனுக்காக மட்டுமே நிற்பேன் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் கூட மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக சார்பில் தாம் போராட்டம் நடத்தியதை நினைவுகூர்ந்த அவர், கீழ்ப்பாசன மாநிலங்களின் எதிர்ப்பை மீறி அணை கட்ட முடியாது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், பிரதமர் மோடி இரு மாநில முதலமைச்சர்களையும் நேரில் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Read More : வெட்கங்கெட்ட ஆபாசநிதி.. அறிவில்லாத அறிவாலயத்தார்..!! உதயநிதியை கிழித்த தவெக ஐடி விங்..!!



