வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களில் சீலிங் ஃபேனும் ஒன்று. ஆனால், அதை சுத்தம் செய்வதை பலர் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் ஃபேனின் இறக்கைகளில் தூசி, எண்ணெய்ப் புகை, அழுக்கு போன்றவை படிந்து, நாளடைவில் பிசுபிசுப்பாக மாறிவிடும். இதனால் ஃபேன் சுழலும் வேகம் குறைவதுடன், அறை முழுவதும் தூசியும் பரவும். குறிப்பாக ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மாதத்திற்கு ஒரு முறையாவது ஃபேனை சுத்தம் செய்வது நல்லது.
முதலில் ஃபேனின் சுவிட்சை அணைத்துவிட்டு, முடிந்தால் மெயின் பவரையும் நிறுத்துங்கள். ஃபேன் முழுவதுமாக நின்ற பிறகே சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாப்பான ஏணி அல்லது ஸ்டூலை பயன்படுத்துங்கள். நாற்காலி போன்ற நிலைத்தன்மை இல்லாத பொருட்களின் மீது ஏறி சுத்தம் செய்ய வேண்டாம். ஒரு மைக்ரோஃபைபர் துணி, பருத்தித் துணி அல்லது டஸ்டரை பயன்படுத்தி ஃபேனில் இருக்கும் தூசியை மெதுவாக துடைக்கவும். பழைய தலையணை உறையை ஒவ்வொரு இறக்கையிலும் போட்டு இழுத்து எடுத்தால், தூசி கீழே விழாமல் உறைக்குள் சேகரித்துவிடும். இதனால் வீடு முழுவதும் தூசி பரவாமல் இருக்கும்.
ஃபேனில் பிசுபிசுப்பான அழுக்கு இருந்தால், ஒரு கப் வெள்ளை வினிகரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலக்கவும். வினிகர் இல்லையெனில் எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம். இந்த கலவையை ஒரு மென்மையான துணியில் நனைத்து ஃபேனின் இறக்கைகளில் தடவி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். அதன்பிறகு ஈரமான சுத்தமான துணியால் ஃபேனை நன்றாக துடைக்கவும். எந்த இடத்திலும் கலவை ஒட்டியிருக்கக் கூடாது. இறுதியாக உலர்ந்த துணியால் மீண்டும் துடைத்தால் ஃபேன் பளபளப்பாக மாறும்.
ஃபேன் சுத்தமான பிறகு, ஒரு துணியில் 2 அல்லது 3 துளிகள் ஆலிவ் எண்ணெய் விட்டு இறக்கைகளில் லேசாகத் தடவலாம். இதனால் ஃபேன் பளபளப்பாக இருப்பதுடன், தூசியும் விரைவாக ஒட்டாது. ஆனால் அதிகமாக எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. சமையலறைக்கு அருகில் இருக்கும் ஃபேனில் எண்ணெய்ப் புகை அதிகமாக படிந்திருக்கும். இதை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பாத்திரம் கழுவும் திரவத்தை கலந்து, அதில் துணியை நனைத்து துடைத்தால் அழுக்கு எளிதாக நீங்கும். அதன் பிறகு ஈரமான துணியால் மீண்டும் துடைத்து உலர்த்துங்கள்.
ஃபேன் மீது நேரடியாக தண்ணீர் ஊற்றக் கூடாது. ஸ்டீல் ஸ்கிரப்பர் அல்லது கடினமான பிரஷ் பயன்படுத்தி தேய்க்கவும் கூடாது. மேலும், ஃபேன் முழுமையாக உலருவதற்கு முன் மின்சாரத்தை இயக்க வேண்டாம். சாதாரணமாக வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேனை மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதும். ஆனால், சமையலறை அருகில் இருக்கும் ஃபேன் அல்லது அதிக தூசி உள்ள பகுதியில் வசிப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. இந்த எளிய முறைகளை பின்பற்றினால், உங்கள் சீலிங் ஃபேன் நீண்ட நாட்கள் சுத்தமாகவும், நல்ல செயல்திறனுடனும் இயங்கும்.
Also Read: “உன்னால ஒழுங்கா சாப்பாடு கூட செய்ய முடியாதா?”… ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரச் செயல்!



