பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
புனிதமான ஷ்ராவண மாதத்தின் இறுதி திங்கள்கிழமையை முன்னிட்டு, அசோக்தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் அசோக்தாம் ஹால்ட் ரயில் நிலையத்திற்கு இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து வந்ததால், கோவிலை நோக்கி வந்த பக்தர்களின் கூட்டம் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது.
அப்போது ஆண்கள் நிற்கும் வரிசைக்கு அருகில் இருந்த ஒரு மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. விழுந்தது வெறும் கேபிள் கம்பி தான் என்றாலும், “மின்சாரம் பாயும் கம்பி விழுந்துவிட்டது” என்ற வதந்தி அங்கு வேகமாக பரவியதால் மக்கள் கடும் பீதியடைந்தனர். இந்த வதந்தியால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில், இடதுபுறம் இருந்த பெண்கள் வரிசையில் அதிகளவில் அழுத்தம் ஏற்பட்டு தடுப்புகள் உடைந்தன. இதனால் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நெரிசலில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்குப் பிறகே முழுமையான காரணங்கள் தெரியவரும் என்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவம் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, இச்சம்பவம் மிகவும் துயரமானது மற்றும் நெஞ்சை உலுக்குவதாகவும் உள்ளது எனக் கூறி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்த பக்தர்களுக்கு உடனடியாக அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.



