பாமகவை சாதி கட்சியாக முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், பாமக இதுவரை 6 இடஒதுக்கீடுகளை போராடிப் பெற்றுத் தந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றம் உருவாகியுள்ளதாகவும், இது கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த மாற்றம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த அரசியல் சூழல் மாற்றத்தை விரும்பும் கட்சிகளுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்காகப் புள்ளிவிவரங்களுடன் துணிச்சலாகக் குரல் கொடுத்து பாமக உறுப்பினர்களே மிகச் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2031ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் தீவிர களப்பணியாற்றி வருவதாகவும், மக்கள் நிச்சயம் தங்களுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, தங்களது ஒட்டுமொத்த கவனமும் தமிழ்நாட்டின் மீதே உள்ளதால் மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றார்.
Read More : நள்ளிரவிலும் பகல் போல வெளிச்சம்.. சூரியன் மறையாத இந்த இடங்களின் பின்னணி என்ன?



