தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரும் 2036ஆம் ஆண்டிற்குள் 1.50 லட்சம் கோடி அமெரிக்க டாலராக (1.5 Trillion USD) உயர்த்தும் தொலைநோக்கு திட்டத்துடன் தமிழக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய தொழில் முதலீடுகளைத் தீவிரமாக ஈர்க்கும் நோக்கில், புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் 21 நாட்களுக்குள் விரைந்து வழங்குவதை உறுதிசெய்யும் புதிய சட்டத்தை இயற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீடு அல்லது 5,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புகளை வழங்கும் பெருநிறுவனங்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் ‘முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு ஆணையம்’ ஒன்றையும் தமிழக அரசு விரைவில் அமைக்க உள்ளது.
மற்றொரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் சொத்துவரி நடைமுறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் வரி ஏய்ப்புகள் மற்றும் குளறுபடிகளைத் தடுத்து, துல்லியமாக வரி மதிப்பீடு செய்வதற்காக ‘ஜி.ஐ.எஸ்’ (GIS – புவியியல் தகவல் அமைப்பு) எனப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் வரைபடங்களைப் பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இப்புதிய டிஜிட்டல் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி, தமிழக அரசின் ‘ஸ்டார்ட் அப் டி.என்’ (StartupTN) நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியை கோரியுள்ளது. இதனையடுத்து, ஜி.ஐ.எஸ் முறையில் சொத்துவரி மதிப்பீடு செய்யத் தகுதியுடைய புத்தாக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியைத் தொடர்ந்து பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளும் நவீனத் தொழில்நுட்ப உதவிகளுக்காக அணுகினால் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : காவிரி விவகாரம்..!! அமித்ஷா, டி.கே. சிவக்குமார் முன்பு பாயிண்டுகளை அடுக்கிய முதல்வர் விஜய்..!!



