விவசாயப் பண்ணைக் குட்டையில் குளிக்கச் சென்ற தாயும், மகளும் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதிமாதையனூரைச் சேர்ந்த ராஜாமணியின் மகள் விக்னேஸ்வரி, தனது கணவர் சரவணகுமார் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், சுதந்திர தின தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான ஆதிமாதையனூருக்குக் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தார்.
மதிய வேளையில் ராஜாமணி, அவரது மகள் விக்னேஸ்வரி மற்றும் மகன் சரவணன் ஆகிய மூவரும் தங்களுக்குச் சொந்தமான சுமார் 12 அடி ஆழமுள்ள விவசாயப் பண்ணைக் குட்டைக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாகத் தாய் ராஜாமணி ஆழமான பகுதியில் தவறி விழுந்து நீரில் தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற விக்னேஸ்வரி உடனடியாக முயன்றபோது அவரும் நீரில் மூழ்கத் தொடங்கினார். இருவரையும் காப்பாற்றத் தம்பி சரவணன் குட்டைக்குள் இறங்கிய நிலையில், மூவருமே நீரின் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.
இவர்களின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் துரிதமாகச் செயல்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்த சரவணனை மட்டும் உயிருடன் மீட்டனர். எனினும், நீரின் ஆழத்தில் மூழ்கிய ராஜாமணி மற்றும் விக்னேஸ்வரி ஆகிய இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை காவல் துறையினரும் தீயணைப்புப் படையினரும், உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி மீட்கப்பட்ட சரவணனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : எங்களுக்கு கார் வேண்டாம்..!! அதற்கு பதில் இதை பண்ணுங்க..!! MLA சௌமியா அன்புமணி அதிரடி அறிவிப்பு..!!


