வேலைப்பளு நிறைந்த இக்கால வாழ்க்கை முறையில், கடைகளில் எளிதாக கிடைக்கும் உறைந்த உணவுகள் (Frozen Foods) பலரது சமையலறையை ஆக்கிரமித்துள்ளன. இருப்பினும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக இவற்றில் சேர்க்கப்படும் அதிக அளவிலான சோடியம், ரசாயனப் பதப்படுத்திகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் ஆகியவை மனித உடலுக்கு மெல்லக் கொல்லும் விஷமாக மாறி வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க இதயவியல் கல்லூரி வெளியிட்ட ஆய்வறிக்கையில், தீவிரமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் சார்ந்த மரணங்களின் அபாயத்தை கணிசமாக உயர்த்துகிறது என பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ஒரு நாளைக்குக் கணிசமான அளவில் இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 67 சதவீதம் வரை அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதன்மையாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் 7 வகையான உறைந்த உணவுகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
கடைகளில் விற்கப்படும் ‘ஃப்ரோசன் பரோட்டா’க்கள் மைதாவால் செய்யப்பட்டு நார்ச்சத்தின்றியும், அதிக உப்பைக் கொண்டும் இருப்பதால் ரத்தச் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றன. அதேபோல, குழந்தைகளுக்குப் பிரியமான ‘பிரெஞ்சு ஃபிரைஸ்’, ஏற்கனவே எண்ணெயில் வறுக்கப்பட்டு உறைநிலைக்குக் கொண்டு செல்லப்படுவதால், அவற்றில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சோடியம் சிறுவயதிலேயே இதய நோய்களுக்கு அடித்தளமிடுகிறது.
இதுமட்டுமன்றி, ‘உறைந்த இறைச்சி’ வகைகளில் புரதம் இருந்தாலும், அதைச் சேமிக்கச் சேர்க்கப்படும் சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமானது என கருதப்படும் ‘உறைந்த பாஸ்தா’ மற்றும் ‘ஸ்டர்-ஃப்ரை காய்கறிகள்’ கூட, அவற்றுடன் சேர்க்கப்படும் சாஸ்கள், சீஸ் மற்றும் சர்க்கரை காரணத்தால் தங்களின் இயற்கை ஊட்டச்சத்தை இழந்து செரிமானக் கோளாறுகளையும் ரத்தச் சர்க்கரை நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றன.
விரைவு உணவாகப் பயன்படும் ‘சாண்ட்விச்’ மற்றும் இனிப்பான ‘வாஃபிள்ஸ்’ போன்றவற்றில் அதிக அளவில் செயற்கைச் சுவையூட்டிகளும் மைதாவும் இருப்பதால், அவை உடனடியாக ரத்தச் சர்க்கரையை உயர்த்திப் பின் தீராத சோர்வை உண்டாக்குகின்றன.
நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல்களின்படி, உறைந்த உணவுகள் சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் வசதியாகவும் தோற்றமளித்தாலும், அவற்றுள் மறைந்திருக்கும் கொழுப்பும் ரசாயனங்களும் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் சீர்குலைக்கின்றன.
எனவே, தற்காலிகச் சுவைக்காக ஆரோக்கியத்தை பணயம் வைக்காமல், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உறைந்த உணவுகளை தவிர்த்து, புதிதாக சமைக்கப்பட்ட இயற்கை உணவுகளுக்கு மாறுவதே நீண்ட ஆயுளுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்று மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
Read More : இந்திய வரலாற்றிலேயே முதன்முறை..!! அனுமதி வழங்கியது மத்திய அரசு..!! வேலையை ஆரம்பித்த RBI..!!



