சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்பிஜி இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து, பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் மூலம் இ-கேஒய்சி (e-KYC) செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே இ-கேஒய்சி முடித்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டியதில்லை.
இண்டேன் கேஸ், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் இந்த ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை தங்களது எல்பிஜி விநியோகஸ்தர் அல்லது ஏஜென்சி மூலமாக மேற்கொள்ளலாம். அதேபோல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலமாகவும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் இ-கேஒய்சி செய்யும் வசதி உள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 16-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் தளங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள், விநியோகஸ்தர் மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் கால அவகாசம் ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி செய்ய ஆதார் அட்டை அல்லது ஆதார் எண், எல்பிஜி இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் எல்பிஜி நுகர்வோர் எண் அல்லது ஐடி ஆகியவை தேவைப்படும். முக அங்கீகாரத்தை மேற்கொள்ள AadhaarFaceRD செயலியும் பயன்படுத்தப்படுகிறது.
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் IndianOil One செயலி மூலமாகவும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் Hello BPCL செயலி மூலமாகவும், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP Pay செயலி மூலமாகவும் இ-கேஒய்சி செய்யலாம். இதற்காக முதலில் சம்பந்தப்பட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, எல்பிஜி இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் உள்நுழைய வேண்டும்.
பின்னர், உங்கள் எல்பிஜி கணக்கு தொடர்பான விவரங்களை உள்ளிட்டு, இ-கேஒய்சி அல்லது ஆதார் முக அங்கீகாரத்திற்கான வசதியைத் தேர்வு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் சரிபார்ப்பை முடித்த பிறகு, முக அங்கீகாரத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அதன்பிறகு, செயலியில் கேட்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி முன்பக்க கேமரா மூலம் முகத்தை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். முக அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும் இ-கேஒய்சி செயல்முறை நிறைவடையும்.
ஆகஸ்ட் 23-ம் தேதிக்குள் இ-கேஒய்சி செய்யத் தவறினால், சில எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எல்பிஜி இணைப்பை தற்காலிகமாக முடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உள்நாட்டு பயன்பாட்டுக்கான மானிய விலை அல்லது சலுகை விலையில் சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம். எனவே, இதுவரை இ-கேஒய்சி செய்யாத வாடிக்கையாளர்கள் காலக்கெடுவுக்குள் தங்களது ஆதார் அங்கீகாரத்தை நிறைவு செய்வது அவசியம்.



