வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தும் கொடுமை இன்னும் பல குடும்பங்களில் தொடரும் நிலையில், ஹரியானாவில் வரதட்சணையாக எஸ்யூவி கார் கேட்டு இளம்பெண்ணையும் அவரது ஒன்றரை மாத குழந்தையையும் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சோஹில் கானுக்கும், நுஹ் மாவட்டம் சலம்பா பகுதியைச் சேர்ந்த சகுஃப்தாவுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை மாத ஆண் குழந்தை இருந்தது. திருமணத்துக்குப் பிறகு சகுஃப்தாவிடம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஸ்கார்பியோ உள்ளிட்ட எஸ்யூவி காரை வரதட்சணையாக வாங்கித் தர வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின்போதும் கார் கேட்டு சகுஃப்தாவை அவரது மாமியார் வீட்டார் துன்புறுத்தியதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
கார் வாங்கிக் கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சோஹில் சகுஃப்தாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் கார் வாங்கிக் கொடுத்த பின்னரே மீண்டும் கணவர் வீட்டுக்கு வர வேண்டும் என அவர் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினையை தீர்க்க கிராமப் பஞ்சாயத்து நடைபெற்றது. அதில், சகுஃப்தாவை மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்பு ஏர் கண்டிஷனர் மற்றும் ரூ.50,000 வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு ஆகஸ்ட் 17-ம் தேதி சகுஃப்தா மீண்டும் கணவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அடுத்த நாளே சகுஃப்தா தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, கணவர் மற்றும் மாமியார் வீட்டார் தன்னை மீண்டும் தாக்குவதாகவும், தனது குழந்தையின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய விபரீதம் நடக்கும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதி சகுஃப்தாவும் அவரது ஒன்றரை மாத குழந்தையான ஜுஹானும் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, இருவரது கழுத்துப் பகுதிகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சகுஃப்தாவின் கழுத்தில் துணியால் நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தையும் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும், இருவரின் உயிரிழப்புக்கான உறுதியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சோஹில், வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தபோது காலில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் போலீஸ் கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சகுஃப்தாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் சோஹில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை, சதி, வரதட்சணை மரணம், கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் சகுஃப்தாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: புது போன் கேட்டு மகன் விபரீத முடிவு! காப்பாற்றச் சென்ற பெற்றோரும் மலையிலிருந்து விழுந்து பலி!



