ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு புதிய கட்டண நடைமுறை கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கிக் கணக்கில் இருக்கும் சொந்தப் பணத்தை எடுத்துக்கொள்வதற்கே கட்டணம் வசூலிப்பது ஏழை மக்களுக்கு எதிரான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வங்கிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்குகள், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது அந்தக் கணக்குகளில் இருந்து நான்கு முறைக்கு மேல் ரொக்கப் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அன்றாட செலவுகளுக்காக வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கிராமப்புற மற்றும் ஏழை மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தாலும், நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் அன்றாட தேவைகளுக்கு ரொக்கப் பணம் முக்கியமானதாக உள்ளது என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களிடம் புழங்கும் ரொக்கப் பணத்தின் அளவு கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2024-25-ல் 6.5 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி, 2025-26-ல் 12 சதவீதமாகவும், 2026-27-ல் 12.9 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களின் அன்றாட பணப் பயன்பாட்டை கருத்தில் கொள்ளாமல் பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிப்பது சரியான நடைமுறை அல்ல என அவர் கூறியுள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் இந்த கட்டண முறையை மத்திய அரசும் எஸ்பிஐ நிர்வாகமும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
Also Read: சினிமா ஷூட்டிங்கில் கொடுத்த வாக்குறுதி! அரசன் கொடை கிராமத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய முதல்வர் விஜய்…



