சினிமா படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில், மக்களின் அடிப்படை பிரச்சினையை நேரில் கேட்டறிந்த விஜய் அளித்த வாக்குறுதி தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி தவித்த கொடைக்கானல் அரசன் கொடை மலைக்கிராமத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடியில் இருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அரசன் கொடை கிராமம் உள்ளது. 250-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்துக்கு இதுவரை முறையான சாலை வசதி இல்லை. மலைப்பாதை மற்றும் வனப்பகுதி வழியாகவே மக்கள் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.
பேருந்து வசதியும் இல்லாததால், கிராம மக்கள் வாடகை ஜீப் மூலம் தாண்டிக்குடி சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து மற்ற பகுதிகளுக்குச் செல்கின்றனர். குறிப்பாக மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும்போது அவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால், தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. ஏற்கெனவே சாலை அமைப்பதற்கான முயற்சி தொடங்கிய நிலையில், ஒப்பந்ததாரர் உயிரிழந்ததால் அந்தப் பணி பாதியில் நின்றது.
இந்த சூழலில், கடந்த ஆண்டு மே மாதம் திரைப்படப் படப்பிடிப்புக்காக அரசன் கொடை கிராமத்துக்குச் சென்ற விஜய், அங்குள்ள மக்களை நேரில் சந்தித்துள்ளார். அப்போது கிராமத்தின் சாலை பிரச்சினையை அறிந்த அவர், ஆட்சிக்கு வந்ததும் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வாக்குறுதியைத் தொடர்ந்து, தவெக ஆட்சி அமைந்த ஐந்தாவது நாளிலேயே அரசன் கொடை கிராமத்துக்கான சாலைப் பணியை தொடங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியின் மூலம் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக மலைப்பாதையில் சிரமப்பட்டு வந்த தங்களுக்கு இந்த சாலை திட்டம் மிகப்பெரிய நிம்மதியை அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விஜய் படப்பிடிப்பின்போது கிராமத்துக்குள் நடந்து சென்று மக்களை சந்தித்த பழைய வீடியோக்களை தவெக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்ட தகவல் வெளியான நிலையில், அந்த வீடியோக்களும் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
Also Read: 20 வயது மாணவியின் கையைப் பிடித்து இழுத்து… 60 வயது முதியவர் செய்த காரியம்!



