தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். அண்மை காலமாக தனது ரசிகர் மன்றங்களை வெறும் திரைப்பட கொண்டாட்டங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தீவிரமான சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதை தொடர்ந்து, இந்த அரசியல் வருகை குறித்த தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். முதல், அண்மையில் தனது மக்கள் இயக்கத்தை பல ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபடுத்தி அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் வரை பலரும் பின்பற்றிய அதே வியூகத்தை நடிகர் தனுஷும் முன்னெடுக்கிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. ரசிகர் மன்றங்களை எதிர்காலத்தில் ஒரு வலுவான அரசியல் அடித்தளமாக மாற்றும் திட்டத்துடன், தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் நலத்திட்டங்களை ஒருங்கிணைக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தனுஷ் தொடங்கவுள்ள புதிய அரசியல் கட்சிக்காக சுமார் 5 பெயர்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இறுதி செய்யப்படும் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்வதற்கான சட்ட நடைமுறைகளை மேற்கொள்ள டெல்லிக்கு வழக்கறிஞர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், இத்தகவல்கள் தொடர்பாக தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை. தற்போதைக்கு வெளியாகும் அனைத்துத் தகவல்களும் அரசியல் வட்டார ஊகங்களாகவே உள்ள நிலையில், கட்சியின் பெயர், கொள்கை முழக்கம் மற்றும் எதிர்கால தேர்தல் செயல்பாடுகள் குறித்து அவரிடமிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இத்தகைய விவாதங்களுக்கு முழுமையான தெளிவை தரும்.
Read More : அற்ப அரசியலுக்காக பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை கைவிடுவதா..? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்..!!



