டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் 400 பிரதிநிதிகள் அடங்கிய மாபெரும் குழுவுடன் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமையும் என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவும் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக, சீன அதிகாரிகள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 2019 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது 200-க்கும் குறைவான அதிகாரிகளே உடன் வந்த நிலையில், இந்த முறை சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் அவர் வருகை தர வாய்ப்புள்ளதாக இந்திய தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பிரிக்ஸ் செயல்பாடுகளைத் தாண்டி, 2020 எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளின் உறவைச் சீராக்கும் முயற்சிகளுக்கே அதிக கவனம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது.
சீன வெளியுறவு அமைச்சகம் இது குறித்துத் தெரிவிக்கையில், பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும், இந்த ஆண்டின் பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தத் தலைமை வகிக்கும் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளது. எனினும் அதிபரின் பயணத் திட்டம் குறித்தோ, இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு குறித்தோ இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அது உறுதிப்படுத்தவில்லை.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளும் சுமார் 3,800 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. பல தசாப்தங்களாக எல்லையில் நிலவி வந்த அமைதி, 2020-ஆம் ஆண்டு நடந்த மோதலில் 20 இந்திய மற்றும் நான்கு சீன வீரர்கள் உயிரிழந்ததையடுத்து சீர்குலைந்தது. நான்கு ஆண்டுகால ராணுவ மோதல் போக்குக்குப் பிறகு, 2024 அக்டோபரில் இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளும் ஒப்பந்தத்தை எட்டின.
இருப்பினும், கடந்த ஜூலை மாத இறுதியில் எல்லையில் மீண்டும் இரு நாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது இருதரப்பு உறவுக்கு மிகவும் அவசியம் என இந்தியா ஆகஸ்ட் 12-ம் தேதி சுட்டிக்காட்டியது. இதன் தொடர்ச்சியாக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-யைச் சந்தித்து எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பெய்ஜிங் சென்றுள்ளார். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் போட்டியாளர்களாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் இரு நாடுகளுக்கும் ஒரு பொதுவான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளன. இந்தச் சூழலில் ஜி ஜின்பிங்கின் இந்திய வருகை, வெளி அழுத்தங்கள் பிரிக்ஸ் அமைப்பைக் பலவீனப்படுத்தக் கூடாது என்ற செய்தியை உணர்த்துவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



