“நீங்க ஒன்னும் இங்கிலாந்து அரசர் அல்ல”; பதவிக்கு வந்துட்டா ஆஜராக முடியாதா?. உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

minister mariam wilson court 30kb

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரரின் வீட்டைப் பூட்டை உடைத்துத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் விடுத்த கோரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று புதுச்சேரி எழில் நகரில் வசிக்கும் தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரைத் தாக்கியதாக லாஸ்பேட்டை காவல்துறையினர் அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்தனர். புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, “நீதிமன்றத்திற்கு வர முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்தின் அரசர் அல்ல; அவர் இந்த மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்பெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், இப்போது பதவிக்கு வந்த பிறகு ஆஜராக மாட்டாரா?” என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், அமைச்சர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று விழாவுக்குச் செல்லவிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது வழியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுச் செல்லலாமே என்று குறிப்பிட்டார்.

“அமைச்சர் சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்ற தவறான செய்தியைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க நாங்கள் விரும்பவில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சர் மரிய வில்சன் எந்தத் தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்பதைத் தெளிவுபடுத்துமாறு அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைப் பிற்பகலுக்குத் தள்ளிவைத்தார்.

1newsnationuser5

Next Post

என் பெயரை கெடுத்துட்டீங்க..! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க..! அமைச்சர் ஆதவ் வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்..!!

Fri Aug 28 , 2026
சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று திமுக ஐடி விங் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த அவதூறு பதிவை நீக்குவதோடு, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் நோட்டீஸ் அனுப்பினார். […]
Aadhav Stalin 2026

You May Like