நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு, சேதமடைந்த கட்டமைப்புகளை மறுசீரமைக்க சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 40,000 கோடி ரூபாய்) வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், “இது முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. நாட்டின் சேதத்தை முழுமையாகக் கணக்கிடும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார். இந்த மறுசீரமைப்புச் செலவு, நேபாள நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். இருப்பினும், 2015-ஆம் ஆண்டு 9,000 பேரைப் பலி வாங்கி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை அழித்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட $9 பில்லியன் இழப்போடு ஒப்பிடும் போது இது குறைவு தான்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு காரணமாக, பாறைகள், பனி, சேறு மற்றும் இடிபாடுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் பெருவெள்ளமாகப் பாய்ந்து இந்த பேரழிவை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் நேபாளம் மற்றும் திபெத்தில் 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. எல்லைப் பகுதியில் உள்ள பல நகரங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. சாலைகள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
சுற்றுலா, வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மற்றும் நீர்மின் உற்பத்தியையே நேபாள நாட்டின் பொருளாதாரம் பெரிதும் நம்பியுள்ளது. தற்போது வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நீர்மின் நிலையங்கள், நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டவை என்பதால், நேபாளத்தின் மின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், நாட்டின் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் நேபாள அரசு உலக நாடுகளிடமிருந்து சிறப்புத் தொழில்நுட்ப உதவிகளைக் கோரி வருகிறது.



