உள்நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும், டீசல் ஏற்றுமதிக்கான தடையை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரஷ்யா நீட்டித்துள்ளது. உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பல சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி முடங்கி, உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. உள்நாட்டு சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே ஏற்றுமதித் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் தடையானது, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யும் கடல்சார் எரிபொருள் மற்றும் கேஸ் ஆயில்களுக்கும் பொருந்தும். உள்நாட்டு எரிபொருள் சந்தையை நிலைநிறுத்தும் நோக்கில், விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரஷ்யா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
அதன்படி, முதலில் ஜூலை 8 முதல் ஜூலை 31 வரை விதிக்கப்பட்ட டீசல் ஏற்றுமதித் தடை, பின்னர் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது நிலவும் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தத் தடை செப்டம்பர் 30 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் அல்லாதவர்கள் டீசல் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பெட்ரோல் ஏற்றுமதிக்கு 2027 ஜனவரி 31 வரையிலும், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு 2026 நவம்பர் மாத இறுதி வரையிலும் ரஷ்யா நீண்டகாலத் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகளவில் அதிக அளவில் டீசல் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. எனினும், ரஷ்ய எரிசக்தி நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுத் தட்டுப்பாடு காரணமாக, தற்போதைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதி பெருமளவு குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு எரிபொருள் சந்தையின் நிலைத்தன்மையைப் பேணவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.



