தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கொல்கத்தா யுவபாரதி மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்தால் பாதிக்கப்பட்ட 33,000 ரசிகர்களுக்கு, மாநில விளையாட்டுத்துறை பட்ஜெட்டிலிருந்து டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13 அன்று யுவபாரதி மைதானத்திற்கு லியோனல் மெஸ்ஸி வருகை தந்தபோது அந்த நிகழ்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸின் அதிகப்படியான தலையீடே இந்த இடையூறுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த நிகழ்வைக் காண ரூ.4,000 மற்றும் ரூ.6,000 கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்கள் தங்களது பணத்தை திரும்பக் கோரிய போதிலும், அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளான தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ‘நபன்னா’வில் (Nabanna) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, “மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த 33,000 விளையாட்டு ரசிகர்கள் செலுத்திய பணம் திருப்பித் தரப்படுவதை உறுதி செய்வதே எனது விருப்பம். இதற்கான பணிகளை ஏற்கனவே நான் தொடங்கிவிட்டேன். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் இந்திரநீல் கான், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) தலைவர் கல்யாண் சௌபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு அவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
முந்தைய அரசின் அலட்சியம் குறித்து விமர்சனம் “இன்று பணி நியமன ஆணை பெற்ற பல விளையாட்டு வீரர்களின் ஆவணங்கள், கடந்த 11 ஆண்டுகளாக முதலமைச்சர் அலுவலகத்திலேயே தூசு படிந்து கிடந்தன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்,” என்று குறிப்பிட்ட முதல்வர், முந்தைய நிர்வாகம் விளையாட்டுத் துறையை புறக்கணித்ததாகக் கடுமையாக விமர்சித்தார்.
“சமீபத்திய ஆண்டுகளில் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுகள் மற்றும் தேசிய அணிகளில் மேற்கு வங்கத்தின் பிரதிநிதித்துவம் என்பது அறவே இல்லை. ஆனால் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் தங்களது வீரர்களைத் தொடர்ந்து அனுப்புகின்றன. வங்காளத்தில் திறமை, அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் கவனம் ஆகியவை உள்ளன; ஆனால் அதற்கான முறையான கட்டமைப்பு, முன்முயற்சிகள் மற்றும் அரசியல் விருப்பம் இல்லை. அனைத்து விளையாட்டுத் துறைகளும் அமைப்புகளும் ஏன் அரசியலால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்? இந்த முறை அந்த அமைப்பையே மாற்றுவோம். அது நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று அவர் கூறினார்.
மேலும், விளையாட்டுத் துறைக்காக 400 கோடி ரூபாய் நிதியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்; இது ஒரு முழு ஆண்டுக்கான நிதி அல்ல, எட்டு மாதங்களை உள்ளடக்கியது. மாநிலத்தின் அனைத்து 294 சட்டமன்றத் தொகுதிகளிலும் டென்னிஸ் மைதானம், பேட்மிண்டன் மைதானம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அடங்கிய மினி உள்விளையாட்டு அரங்குகளை நாங்கள் கட்டுவோம். ஒரே ஆண்டில் 294 மைதானங்களையும் கட்டுவது சாத்தியமில்லை என்பதால், இந்த ஆண்டு 100 மைதானங்களை கட்டுவோம். முந்தைய அரசு விளையாட்டுத் துறையைப் புறக்கணித்ததால், தற்போதுள்ள மைதானங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன,” என்று தமது அரசின் திட்டங்களையும் சுவேந்து அதிகாரி விளக்கினார்.



