10 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் உணவு கட்டுப்பாட்டு ஆணையம் ஆலோசனைகள் நடத்தியும், விவாதித்தும், முடிவுகளை ஒத்திவைத்தும் வருகிறது. இதற்கிடையில், நாட்டில் தொற்றா நோய்களின் சுமை சீராக அதிகரித்து வருகிறது. தற்போது நான்கில் ஒரு இந்தியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த பத்தாண்டுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்துள்ளது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளின் முன்புறத்தில் லேபிள் ஒட்டுவது குறித்த விவகாரம்தான் தற்போது முக்கிய பேசுபொருளாக உள்ளது. அதாவது, உணவுப் பாக்கெட்டுகளின் பின்புறம் சிறிய எழுத்துக்களில் மறைக்கப்படாமல், முன்புறத்தில் தெளிவாக, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஊட்டச்சத்து எச்சரிக்கைகளை வைப்பது ஒரு எளிய, ஆனால் மாற்றத்தை ஏற்படுத்தும் யோசனையாகும். ‘சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு அதிகம் உள்ளது’ என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இந்த விவகாரத்தில் தற்போது உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 2026-ல், எச்சரிக்கை லேபிள்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் ஆகஸ்ட் மாதத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே விரும்பும் வகையிலான ஒரு திட்டத்தை FSSAI முன்மொழிந்தது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் பொறுமை எல்லை மீறியது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தத்திற்கு FSSAI அடிபணிகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜே.பி. பர்திவாலா, “நீங்கள் நீதிமன்றத்தை அலட்சியப்படுத்துகிறீர்களா? உங்கள் மீதான அழுத்தம் எங்களுக்குத் தெரியும். நீங்கள் தானாகவே இதைச் செய்யப் போகிறீர்களா அல்லது நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?” என்று கடுமையாக எச்சரித்தார்.
நீதிமன்றத்தின் இந்தக் கவலைக்கு ஒரு கசப்பான உண்மைதான் காரணம்: 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளே இதற்கு முக்கிய காரணமாகும். பாக்கெட் உணவுகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால் இந்தியாவின் அதிபதப்படுத்தப்பட்ட உணவு சந்தை 2009 முதல் 2023 வரை 150%க்கும் மேல் வளர்ந்துள்ளது. வெளிப்படைத்தன்மையின் தேவை முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உள்ளது. 2026 பொருளாதார ஆய்வறிக்கையின்படி, அதிபதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரிப்புக்கு இணையாக மக்கள் மத்தியில் உடல் பருமனும் அதிகரித்துள்ளது.
ஒருவழியாக FSSAI இப்போது இறங்கி வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28 அன்று, சர்க்கரை, கொழுப்பு அல்லது உப்பு அதிகம் உள்ள பொருட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை லேபிள்களை முன்மொழிந்து ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னரும், கோகோ-கோலா மற்றும் நெஸ்லே, பெப்சிகோ போன்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்துறை குழுக்கள் நீண்டகாலமாக இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து வந்ததாக ‘ராய்ட்டர்ஸ்’ அறிக்கை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த முன்மொழிவிலும் பல குறைபாடுகள் உள்ளன. ஒரு பொருளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்தான ஊட்டச்சத்துகள் அதிகமாக இருந்தால் மட்டுமே எச்சரிக்கை லேபிள் கொடுக்கப்படும் என்பது இதன் விதியாகும். இதன் அர்த்தம், கொழுப்பு குறைவாக உள்ள ஒரு அதிக சர்க்கரை கொண்ட பொருள், எந்த எச்சரிக்கை லேபிளும் இன்றி எளிதாகத் தப்பித்துவிட முடியும்.
மேலும், மொத்த சர்க்கரைக்குப் பதிலாக ‘சேர்க்கப்பட்ட சர்க்கரையை’ மட்டும் கணக்கிடுவது, தற்போதைய வடிவத்தில் 1 மற்றும் 2-ஆம் கட்டங்கள் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் இருப்பது, மற்றும் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டு 2022 வரைவு அறிவிப்பின் ஒரு பகுதியாக உள்ள HFSS (High in Fat, Salt, and Sugar) வரையறையை சேர்க்காதது போன்ற பல ஓட்டைகள் இதில் உள்ளன.
அச்சிடப்படும் எழுத்துக்களின் அளவும் மிகவும் சிறியதாக உள்ளது. எச்சரிக்கை லேபிள்களின் அளவை எவ்வாறு வடிவமைப்பது என்பதைப் பல நாடுகளிடம் இருந்து FSSAI கற்றுக்கொள்ளலாம். மேலும், இந்தியாவைப் பொருத்தவரை எச்சரிக்கை லேபிள்களில் படங்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்த வேண்டும். இறுதியாக, FSSAI இதை மேலும் தாமதப்படுத்தக் கூடாது. திருத்தங்களுக்கு 2022-ஆம் ஆண்டின் வரைவு அறிவிப்பையே பயன்படுத்த வேண்டும்; புதிதாக ஒரு நடைமுறையைத் தொடங்கக் கூடாது. இருப்பினும், இந்த வழக்கு வரும் செப்டம்பர் 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.



