தனது கல்வி நிறுவனத்திற்கு அனுமதி பெறுவதற்காக முன்னாள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்ததாக சட்டசபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், அவரது எம்.எல்.ஏ. வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ஜெனிபர் சார்பில் அவரது வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் இந்த நோட்டீஸை இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ளார். அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மரிய வில்சன், அண்மையில் சட்டசபை விவாதத்தின் போது தனது கல்வி நிறுவன அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி கடுமையான குற்றமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு முற்றிலும் முரணாக செயல்பட்டுள்ளதால், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின்படி அவரது எம்.எல்.ஏ. தேர்தல் வெற்றிச் சான்றிதழைத் திரும்பப் பெறுவதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் உயர்நீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.



