ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் வெறும் சுவையான உணவுப்பொருளாக மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மருந்தாகவும் போற்றப்படுகிறது. இயற்கைச் சர்க்கரைகளுடன் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள தேனைச் சரியாக உட்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை சீராக்கி, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
இருப்பினும், தேனை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைகளுக்குப் பதிலாகத் தீங்கையே விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். குறிப்பாக, சில குறிப்பிட்ட பொருட்களுடன் தேனைக் கலந்து சாப்பிடுவது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், எவற்றுடன் தேனைச் சேர்க்கக் கூடாது என்பதை அறிவது மிகவும் அவசியமாகிறது.
தேனை சூடாக்குவதும் வெந்நீரில் கலப்பதும்:
உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர் கொதிக்கும் வெந்நீரில் தேனைக் கலந்து குடிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் தேனை 140°F (60°C) வெப்பநிலைக்கு மேல் சூடாக்கும்போது அதில் ‘ஹைட்ராக்ஸிமெதைல்ஃபர்ஃயூரல்’ (HMF) எனப்படும் நச்சுத்தன்மை உருவாகக்கூடும். ஆயுர்வேத விதிகளின்படி, தேனைச் சூடாக்குவது அதன் இயற்கை குணங்களை மாற்றி, செரிமானத்தைக் கடினமாக்கும். எனவே, தேனை எப்போதும் மிதமான வெதுவெதுப்பான நீரிலோ அல்லது ஆறிய நீரிலோ மட்டுமே கலந்து பருக வேண்டும்.
தேன் மற்றும் நெய்யை சம அளவில் கலத்தல்:
ஆயுர்வேதத்தின் படி, தேனையும் நெய்யையும் சம அளவில் கலந்து சாப்பிடுவது ஆபத்தான நச்சுத்தன்மையை உருவாக்கும். குளிர்ச்சித் தன்மை கொண்ட தேனும், வெப்பத் தன்மை கொண்ட நெய்யும் சம அளவில் சேரும்போது, ‘கிளாஸ்ட்ரிடியம் போட்யூலினம்’ பாக்டீரியாவின் தாக்கத்தால் வயிற்று வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தவிர்க்க வேண்டிய பிற உணவுப் பொருட்கள்:
புளித்த தயிர் மற்றும் மதுபானம் போன்ற நொதிக்கவைக்கப்பட்ட உணவுகளுடன் தேனை சேர்க்கும்போது, தேனில் உள்ள இயற்கைச் சர்க்கரை நொதித்தலை அதிகரித்து வயிற்று உபாதைகளை உண்டாக்கும். அதேபோல, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையுடன் தேனை இணைத்துச் சாப்பிடுவது உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து உடல் பருமன் மற்றும் நீரிழிவு அபாயத்தைக் கூட்டும். மேலும், மீன் உணவுகளுடன் தேனைச் சேர்ப்பதும் செரிமான அமைப்பைப் பாதிக்கும்.
அதேபோல், முள்ளங்கி மற்றும் வெங்காயத்துடன் தேனை சேர்த்து உட்கொள்வது உடலில் வெப்ப நிலையை அதிகரித்து, செரிமான மண்டலத்தில் வீக்கத்தையும் நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் ரகப் புளிப்புப் பழங்களுடன் சூடான தேனைக் கலப்பது வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.
எனவே, எப்போதும் தூய்மையான இயற்கை தேனை வாங்கிப் பயன்படுத்துவதுடன், கொதிக்கும் நீர், சூடான தேநீர் அல்லது பாலில் தேனைக் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். காற்றுப்புகாத உலர்ந்த பாத்திரத்தில் சேமித்து, மிதமான அளவில் தேனைப் பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதன் முழுமையான மருத்துவ நன்மைகளைப் பெற முடியும்.
Read More : 100% வரி..! ஆப்பு வைத்த அமெரிக்கா..! விழிபிதுங்கும் இந்தியா, சீனா..!



