இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்குப் பதில் அளிக்கும் வகையில், “சிலர் பொய்களையும் விரக்தியையும் பரப்பி வரும் நிலையிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது” என்று அவர் மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்திய மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உலக சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இந்த 7.8% வளர்ச்சி விகிதம் நாட்டின் ஒட்டுமொத்த பலத்தையும், மக்களின் உழைப்பையும் காட்டுகிறது என்று கூறினார்.
அதாவது, 2020 கொரோனா காலத்திற்குப் பிறகு உலகளவில் அமைதியின்மையும், விநியோகச் சங்கிலி பாதிப்புகளும் தொடர்ந்து நிலவி வருகின்றன. உலக நாடுகள் பலவும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது, இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது.
உள்நாட்டில் சிலர் எப்போதும் விரக்தியிலும், பொய்களைப் பரப்புவதிலும் குறியாக உள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, ஆனால், அத்தகைய எதிர்மறை எண்ணங்களையும் தடைகளையும் தகர்த்து இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றால், நாடு அனைத்துத் துறைகளிலும் ‘சுயசார்பு இந்தியா’வாக மாறுவது மிகவும் அவசியமாகும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் Wed in India இயக்கம். வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுப்போக்கு பயணங்களையும் தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்திய பிரதமர், சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



