இந்தியாவில் விமானப் பயணத்தை சாமானிய மக்களுக்கும் எளிதாக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ‘உடான்’ (UDAN) திட்டத்தின் கீழ் இந்தப் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இந்தியாவின் 3-வது ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (hub and spoke) சேவையை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த பயணிகளும், இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் வழியாக சர்வதேச நாடுகளுக்கு தடையின்றி நேரடியாகப் பயணிப்பதை உறுதி செய்வதே இந்தச் சேவையின் முக்கிய நோக்கமாகும். இதற்கு முன்பாக வாரணாசி மற்றும் அமிர்தசரஸில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பயணிகளிடையே மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 12 ஆண்டுகளில் சாதனை: மேலும், விமானப் போக்குவரத்துத் துறையின் அசுர வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், ‘உடான்’ திட்டம் நாட்டின் விமானப் போக்குவரத்து வலையமைப்பை முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிவுபடுத்தியுள்ளது என்றார்.
2014-ஆம் ஆண்டில் வெறும் 74-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 166-ஆக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், சராசரியாக ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய விமான நிலையம் அல்லது புதிய முனையத்தின் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நடப்பு ஆண்டின் மார்ச் மாதம் திருத்தப்பட்ட பிராந்திய இணைப்புத் திட்டமான ‘மாடிஃபைட் உடான்’ (Modified UDAN) செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் நேரடி நிதி ஆதரவுடன் இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.28,840 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



