ஆந்திரப் பிரதேசத்தில் மலேரியா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட குளோரோக்வின் மாத்திரைகளை உட்கொண்ட பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில், 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலவரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மலேரியா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதி மக்களுக்கு குளோரோக்வின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாத்திரைகளை உட்கொண்ட சிலருக்கு அடுத்தடுத்து உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதில் 2ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி மதிவி ஜமுனாவும் பாதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் 52 பேர் மருத்துவமனை மற்றும் உள்ளூர் சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுமியின் மரணத்துக்கான காரணம் மற்றும் மருந்து உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளுக்கு இடையேயான தொடர்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்றுள்ளது.
மேலும், விஜயவாடா, ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடா பகுதிகளில் இருந்தும் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அங்கு சென்று சுகாதார நிலைமையை கண்காணிக்க உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்து ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
மலேரியா சிகிச்சை மற்றும் தடுப்பில் பயன்படுத்தப்படும் குளோரோக்வின், மலேரியா ஒட்டுண்ணியை அழிக்கும் தன்மை கொண்ட மருந்தாகும். இந்நிலையில், ஒரே பகுதியில் மாத்திரை உட்கொண்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், சம்பவத்தின் முழுமையான பின்னணியை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Also Read: செக்கில் “Only”னு ஏன் எழுதணும் தெரியுமா?… இந்த சின்ன விஷயம் பண மோசடியைத் தடுக்க உதவும்!



