ரஷ்யாவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில், தன்னைத் தள்ளிய வாடிக்கையாளரை மனிதவடிவ ரோபோ ஒன்று பதிலுக்கு எட்டி உதைத்து தாக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, அந்த வீடியோவில், கருப்பு நிற டி-சர்ட் அணிந்த நபர் ஒருவர், கடையில் நின்றிருந்த ரோபோவை அணுகி அதை தள்ளுகிறார். உடனடியாக அந்த ரோபோ தனது காலை அசைத்து, அவரை எட்டி உதைப்பது போல பதிலடி கொடுக்க முயல்கிறது. தொடர்ந்து அந்த ரோபோ கட்டுப்பாட்டை மீறி நகரத் தொடங்கியதால், அதை ஊழியர்கள் சுவிட்ச் ஆஃப் செய்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ரோபோக்கள் மனிதர்களைப் பழிவாங்கும் காலம் வந்துவிட்டது என்பது போல பலரும் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர், அதாவது “மனிதர்களின் அகந்தை ரோபோக்களையும் கோபப்பட வைத்துவிட்டது” என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் செயற்கை நுண்ணறிவின் பொறுமையைச் சோதிப்பதாக நினைத்தோம், ஆனால் அது நம் பொறுமையைச் சோதிக்கத் தொடங்கிவிட்டது” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். ரோபோவுக்கும் சுயமரியாதை உண்டு; அதை அளவுக்கு அதிகமாக சீண்டினால் இதுதான் நடக்கும்” என சிலர் பதிவிட்டுள்ளனர்.
ரிமோட் கட்டுப்பாடா? அதே வேளையில், இந்த சம்பவம் உண்மையிலேயே ரோபோ தானாகச் செய்ததா அல்லது யாராவது அதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கி நாடகமாக்கினார்களா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பியுள்ளனர். ரோபோ பின்னணியில் இருந்து மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் என நெட்டிசன் ஒருவர் விமர்சித்துள்ளார்.



