தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு மற்றும் வாக்குறுதி முரண்பாடுகளைக் கடுமையாக சாடினார். மக்கள் சார்பாக ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கவே எதிர்க்கட்சியாகத் தங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், பழிபோடும் தந்திரங்களில் ஈடுபடாமல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2024-ம் ஆண்டை விட 2025-ல் வழிப்பறி, திருட்டு, கொலை, கலவரம், சாதியப் பாகுபாடு உள்ளிட்ட குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கடந்த திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதை ஆளும் அரசே தனது கொள்கைக் குறிப்பில் பெருமையுடன் ஒப்புக்கொண்டிருக்கிறது எனக் கூறி நன்றி தெரிவித்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்று 116 நாட்கள் ஆன போதிலும், புதிய நலத்திட்டங்களை உருவாக்குவதை விட முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும், பரந்தூர் விமான நிலையம், மாமல்லன் கால்வாய் போன்ற மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்வதுமே அரசின் சாதனையாக உள்ளது. முழு விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பயணம் எனத் தேர்தல் களத்தில் அள்ளிவீசிய வாக்குறுதிகளைப் பாதியளவே அறிவித்துவிட்டு நாடகம் ஆடுகின்றனர். இது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அல்ல; பொதுமக்களுக்கு காது குத்தும் திட்டம் என்று கடுமையாக விமர்சித்தார்.
அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘எங்களுக்கு சாரி வேண்டாம், நீதிதான் வேண்டும்’ என ஆவேசமாகப் பேசிய இன்றைய முதலமைச்சர், தனது 116 நாள் ஆட்சியில் அரங்கேறியுள்ள 8 காவல் மரணங்களுக்கு இதுவரை நீதியும் பெற்றுத் தரவில்லை, ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை. எம்ஜிஆர் நகர் வெங்கடேசன், கதிரேசன், அருணாச்சலம், பூசாரி பரமசிவம் உள்ளிட்டோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்; பலர் அவமானத்திலும் சிறைக் காவலிலும் இறந்துபோயுள்ளனர். முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் உள்துறையும், உளவுத்துறையும் ஒட்டுமொத்தமாகச் செயலிழந்துவிட்டன என குற்றம்சாட்டினார்.
காவல் துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய அவர், “சமூகத்தில் குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறை, அரசை ஜனநாயக ரீதியாக விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், ஜென்சி இளைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறது. ஆனால் முதலமைச்சரை வெளிப்படையாகத் தாக்கிப் பேசும் பாஜக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எங்களுக்கு வந்தால் ரத்தம், பாஜகவுக்கு வந்தால் தக்காளி சட்னியா? அவர்கள் அடித்தாலும் வெளியே சொல்லக் கூடாது என்ற ஆளும் கட்சியின் இந்த விசித்திரமான அரசியல் உத்தியை இதுவரை யாரும் பார்த்ததில்லை” என்று ஆவேசமாக பேசினார்.



