நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 9:02 மணியளவில், விமானம் ‘பே எண் 06’ (Bay No. 06) பகுதியில் நிறுத்தப்படும்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம், ‘விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்’ (VDGS) என்ற வழிகாட்டும் கம்பத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்; யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஏணிப் படிகள் உதவியுடன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நிறைவடைந்த பிறகே உண்மை காரணம் தெரியவரும் என்றும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விமான நிலையத்தின் இயல்பான போக்குவரத்துப் பணிகள் பாதிக்கப்படாமல் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.
இண்டிகோ நிறுவனத்திற்கு இது கடந்த 24 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது அசம்பாவிதமாகும். வியாழக்கிழமையன்று தோஹாவிலிருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தின் (6E 1302 – A321) பைலட் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக மஸ்கட் நகரத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மாற்று விமானம் மற்றும் ஊழியர்கள் மூலம் பயணிகள் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



