தமிழக அரசில் அடுத்தடுத்து நிகழும் அமைச்சரவை மாற்றங்கள் அரசியல் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், K.A. செங்கோட்டையனின் இலாகா மீண்டும் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை கவனித்து வரும் அவருக்கு, பள்ளிக்கல்வித்துறை மீண்டும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக ஆட்சி தொடங்கியபோது செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் பொறுப்பில் நீடிக்காமல், முதல்வர் விஜய்யிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையைப் பெற்றதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவரது அடுத்த இலாகா மாற்றம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையை மீண்டும் செங்கோட்டையனிடம் ஒப்படைப்பதற்கு முக்கிய காரணமாக அவரது முந்தைய நிர்வாக அனுபவம் பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அவர், பள்ளிக் கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார். அந்த அனுபவத்தை தவெக அரசின் கல்விப் பணிகளிலும் பயன்படுத்தும் வகையில் இலாகா மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வேறு அமைச்சருக்கு வழங்கப்பட்டு, செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த இறுதி முடிவு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.



