தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் கடுமையான ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்சி நிதி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பெருமளவில் பணம் சென்றுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள விவகாரங்களையும் அவர் அவையில் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துப் பேச எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் முயன்றனர். ஆனால், முதலமைச்சரின் பதிலுரை மீது பேசுவதற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் வெடித்தது. இதனால் அவையின் மாண்பு காக்கப்படவில்லை எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமலாக்கத்துறையின் வழக்கமான குற்றச்சாட்டுகளை காகிதத்தில் அச்சிட்டு வந்து வாசிப்பதற்கு எதற்கு 3 நாட்கள் கால அவகாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். பதில் கூற முடியாத பழிபோடும் பேச்சுகளையும், திசைதிருப்பும் உத்திகளையும் கையாண்டு, எந்தவித அரசியல் தயாரிப்பும் இன்றி சினிமா பாணியில் ‘ரோல் கேமரா, ஆக்ஷன்’ மோடில் முதல்வர் கிரின்ஜ் வசனங்களை பேசி இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சியின் உண்மையான வாதங்களை எதிர்கொள்ள திராணியின்றி தப்பியோடாமல், அடுத்த முறையாவது மக்கள் பிரச்சனைகளுக்கு முறையாக பதிலளிக்க தயாராக வாருங்கள் என உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Read More : கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி!.. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..



