பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்! 26.5 ஏக்கரில் பிரமாண்ட வளாகம்..

WhatsApp Image 2026 09 08 at 1.39.48 PM 1

சென்னையின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்காக 26.5 ஏக்கர் வரை நிலத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டத்துக்கான முதற்கட்ட நிர்வாக அனுமதியை விரைவில் வழங்க அரசு தயாராகி வருகிறது.


புதிய வளாகத்தின் முக்கிய கட்டிடம் 15 மாடிகளுடன் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. சாந்தோம் பிரதான சாலையில் இருந்து நேரடியாக அணுகும் வகையில் இந்த வளாகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளதுடன், ஒரே இடத்தில் தேவையான அளவு நிலம் கிடைப்பதால் பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்துக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் பட்டினப்பாக்கம் மட்டுமின்றி, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், நந்தம்பாக்கம் பின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள பகுதி ஆகியவையும் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் பட்டினப்பாக்கம் பகுதி தேர்வானது.

திட்டத்துக்கான நிலத்தில் பெரும்பகுதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமானது. மயிலாப்பூர் வருவாய் கிராமத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை பொதுத்துறை பயன்பாட்டுக்கு வழங்க வீட்டு வசதி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் சர்வே எண் 4593/1-ல் 0.55 ஏக்கர், 4593/29-ல் 0.15 ஏக்கர், 4593/33-ல் 20.67 ஏக்கர் நிலங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலங்கள் 1958ஆம் ஆண்டு வீட்டு வசதித் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டன. பின்னர் 1963 முதல் 1968ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கான 1,112 குடியிருப்புகளும், வீட்டு வசதி வாரியத்தின் 96 குடியிருப்புகளும் இங்கு கட்டப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை 1,380 ஆக அதிகரித்தது.

பழுதடைந்த நிலையில் இருந்த 1,284 குடியிருப்புகள் ஏற்கனவே இடிக்கப்பட்டுவிட்டன. தற்போது எஞ்சியுள்ள 96 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிலத்தை புதிய அரசு வளாகத்துக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சாந்தோம் பிரதான சாலையை ஒட்டியுள்ள இந்த நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.22 ஆயிரம் வழிகாட்டி மதிப்பு உள்ளது. இதன் அடிப்படையில் 21.37 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2,047 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. நிலத்தை அரசின் பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான மதிப்பை நிர்ணயித்து உரிய தொகையை செலுத்த வேண்டும் அல்லது அதற்கு இணையான மாற்று அரசு நிலத்தை வழங்க வேண்டும் என வீட்டு வசதி வாரியம் நிபந்தனை முன்வைத்துள்ளது.

இதனுடன், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர் நிலத்தையும் திட்டத்துக்குப் பயன்படுத்த மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களையும் திட்டப் பரப்பில் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் நிலங்களை ஒருங்கிணைத்தால் சுமார் 25 ஏக்கர் நிலம் கிடைக்கும். வருவாய்த்துறையின் கூடுதல் நிலமும் இணைந்தால் மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் உருவாகும்.

Also Read: தேர்தல் சீட் வாங்கித் தருவதாக ரூ.4.5 கோடி மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல்!

Saranya

Next Post

தங்கத்தை போல செம்பு விலை வரலாறு காணாத உச்சம்!. என்ன காரணம்?

Tue Sep 8 , 2026
செம்பு விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது. உலக அளவில் நிலவும் கடுமையான தட்டுப்பாடு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட செம்பு இறக்குமதி மீது அமெரிக்கா புதிய வரி விதிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. லண்டன் உலோகம் மற்றும் பங்குச் சந்தையில் இந்தத் தொழிற்துறை உலோகம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக உயர்ந்து, புதிய சாதனையாக ஒரு டன் 14,617 டாலரை […]
Copper Prices high 30kb

You May Like