தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெட்டுவான் கோவில், பெரும் பாறையை மேலிருந்து கீழாக குடைந்து செதுக்கப்பட்ட தனித்துவமான கட்டட கலை அமைப்பால் ‘தென்னிந்தியாவின் எல்லோரா’ மற்றும் ‘மினி கைலாசா’ என்று போற்றப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் மாறஞ்சடையனால் தொடங்கப்பட்ட இந்தக் கோவில், ஏதோ ஒரு காரணத்தால் முழுமையடையாமல் முற்றுப்பெறாத நிலையிலேயே விடப்பட்டது. பண்டைய காலத்தில் ‘அரைமலை’ என்று அழைக்கப்பட்ட கழுகுமலையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த அரிய கலைச் சின்னத்தை தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
பொதுவாக கட்டடங்கள் அஸ்திவாரம் அமைத்து கீழிருந்து மேலாக எழுப்பப்படும்; அல்லது குடைவரை கோவில்கள் மலையின் பக்கவாட்டில் இருந்து குடையப்படும். ஆனால், வெட்டுவான் கோவில் எவ்வித அஸ்திவாரமும் இன்றி, செங்குத்தான பாறையை ‘பா’ வடிவில் சுமார் 7.50 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டியெடுத்து, அதன் உச்சிப் பகுதியை கலசமாக கொண்டு சிகரம், தளம், கூரை, சுவர்கள் என தலைகீழாக மேலிருந்து கீழ் நோக்கி குடையப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற எல்லோரா கைலாசநாதர் கோவிலை போலவே, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இக்கோவிலின் சிகரப் பகுதி மட்டுமே முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் மற்றும் கருவறைப் பணிகள் முழுமையடையாத நிலையில், கருவறையில் உள்ள விநாயகர் சிலை பிற்காலத்தில் வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இக்கோவிலின் சிகரத்தில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் உலகத் தரம் வாய்ந்தவை. விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும், மழைநீர் சுவரில் படாமல் இருப்பதற்காக கபோதம் மற்றும் யாளி உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் கிழக்குப் பகுதியில் சிவனும் பார்வதியும் உரையாடுவது போன்ற உமாமகேஸ்வரர் சிற்பம் எழிலாக காட்சியளிக்கிறது. மேற்கு பகுதியில் விஷ்ணுவும், வடக்கு பகுதியில் பிரம்மாவும், தெற்கு பகுதியில் தட்சிணாமூர்த்தியும் செதுக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக சிவாலயங்களில் யோக முத்திரையுடன் காணப்படும் தட்சிணாமூர்த்திக்கு மாறாக, இங்கு கையில் இசைக்கருவியான ‘மிருதங்கம்’ ஏந்தியவாறு தட்சிணாமூர்த்தி காட்சி தருவது வேறு எங்கும் காண முடியாத தனிச்சிறப்பாகும். மேலும், கூரையைத் தாங்கியபடி பல்வேறு முகபாவங்களுடன் இசைக்கருவிகளை இசைத்தும் நடனமாடியும் காட்சி தரும் பூதகணங்கள், திசை காவலர்கள் மற்றும் தேவலோக மங்கையரின் உருவங்களும் ஒரே பாறையில் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.
வெட்டுவான் கோவில் அமைந்திருக்கும் இதே மலைப் பகுதியில், தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும் சமணர் பள்ளியும் அமைந்துள்ளன. இவை பராந்தக நெடுஞ்சடையான் அல்லது முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. மாமல்லபுரத்தில் பல்லவர்கள் ஒரே கிரானைட் பாறையில் பஞ்ச ரதங்களைச் செதுக்கியது போல, பாண்டியர்கள் தங்களது இணையற்ற சிற்பத்திறனால் ஒரே பாறையில் வடித்தெடுத்த இந்த வெட்டுவான் கோவில், தமிழர்களின் திராவிட கட்டட கலை வரலாற்றில் நீங்காத பொக்கிஷமாகத் திகழ்கிறது.



