மண்ணைத் தொடுவது, புல்வெளியில் அமர்வது, மரப்பட்டைகளை தொட்டுப் பார்ப்பது போன்ற எளிய இயற்கை சார்ந்த செயல்பாடுகள் நமது தோலின் ஆரோக்கியத்தையும், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் கணிசமாகப் பலப்படுத்துவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பின்லாந்து சுற்றுச்சூழல் நிறுவன ஆய்வாளர் மீரா க்ரோன்ரூஸ் நடத்திய பரிசோதனையில், மண் மற்றும் பாசியை வெறும் 20 விநாடிகள் கைகளில் தேய்த்தவர்களின் தோலில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பல்வகை தன்மை (Microbiome diversity) அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. தோலில் பல்வேறு வகையான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை நோய்களை உண்டாக்கும் தீய பாக்டீரியாக்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி சமநிலையை ஏற்படுத்துகின்றன.
பின்லாந்தில் உள்ள மழலையர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ‘வஹ்விஸ்டு’ (Vahvistu) ஆய்வு திட்டத்தில், காடு போன்ற அமைப்பில் சேறு, மண் மற்றும் மரத்துண்டுகளுடன் விளையாடிய குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கண்டறியப்பட்டன. அவர்களின் ரத்தத்தில் ‘காம்மா புரோட்டியோபாக்டீரியா’ மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தும் ‘டி செல்கள்’ (Regulatory T cells) அதிகரித்துள்ளது தெரியவந்தது. இது ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் அழற்சி நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
இந்த நன்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், வீட்டு தோட்டம் அமைக்கும் பெரியவர்களுக்கும், அலுவலகங்களில் பசுமைச் சுவர்கள் அமைக்கப்பட்ட சூழலில் பணிபுரிபவர்களுக்கும் கூட சம அளவில் கிடைப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நவீன நகரமயமாதலில் மக்கள் இயற்கையை விட்டு விலகிச் செல்வதே பல நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகளுக்குக் காரணம் எனக் கூறும் விஞ்ஞானிகள், அன்றாட வாழ்வில் கைகளில் சேறு படுவதைப் பற்றி அஞ்சாமல் இயற்கையைத் தொட்டு உணர்வது உடல்நலத்திற்கு மிக அவசியமானது என வலியுறுத்துகின்றனர்.



