பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் ரூ.3,000 ரொக்கப் பரிசு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான முடிவு குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், கடந்த ஆண்டைப் போலவே இந்த பொங்கலுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், மக்களின் நலனுக்கான பல்வேறு உதவிகளை வழங்குவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் திட்டத்தில் ரொக்கத் தொகையை இணைப்பது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ரொக்கப் பணத்தையும் வழங்குவது சாத்தியமா என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் பரிசீலனையில் உள்ளன. குறிப்பாக, அரசின் நிதிநிலை மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டு முடிவெடுப்பார் என்றும், அதன்பின்னர் பொங்கல் பரிசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
Also Read: இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி.. தவெக ஆட்சிக்கு வந்தால் ஆதரவு! சிபிஎம் நிர்வாகி சண்முகம் பரபரப்பு பேட்டி…



