தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொகுதிப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளவும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறியவும் ஏதுவாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வாகன பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்காக மாதம் ரூ.75,000 மற்றும் அலுவலக உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், கரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் விரிவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதேபோல், மருத்துவக் கல்வியை மேம்படுத்த ரூ.351 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மருத்துவப் படிப்புகளில் புதிதாக 6,098 இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், பெரம்பலூரில் ரூ.300 கோடி மதிப்பில் 400 படுக்கைகள் கொண்ட பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அரசு ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.16 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால் அரசின் செலவினம் மாதம் ரூ. 30 கோடியும், ஆண்டுக்கு ரூ. 360 கோடியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



