சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் ஏறும் தளத்தை (Pickup Plaza) மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கி. ராம்மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முனையத்திற்கு முன்பாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பயணிகள் ஏறும் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கும் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி உட்பட ரூ. 22.88 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, பயணிகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களுக்காக பிரத்யேகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியாகும். ஆரம்ப கட்டமாக, ஊபர், ஓலா, ரேபிடோ, பாஸ்ட் டிராக், ரெட் டாக்ஸி , டபிள்யூடிஐ மற்றும் ப்ரீபெய்ட் டேக்ஸிகள் உள்ளிட்ட சேவைகள் இந்த பிளாசாவிலிருந்து இயக்கப்படும். புதிய அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பிறகு, மற்ற மஞ்சள் பலகை வாகனங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு முனையத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிளாசாவில் 150 பயணிகள் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட கூரை, குடிநீர் வசதிகள், விமான தகவல் காட்சி அமைப்பு (FIDS) மற்றும் பல பயணிகள் அடிப்படை வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த வசதியில் தலா 7 மீட்டர் அகலம் கொண்ட மூன்று பிரத்யேகப் போக்குவரத்துத் தடங்கள் உள்ளன. இதில் ஏ மற்றும் பி தடங்கள் பயணிகள் ஏறுவதற்காகப் பயன்படுத்தப்படும், சி தடம் வெளியேறும் வழியாகச் செயல்படுவதுடன், இதில் யு-டர்ன்வசதியும் உள்ளது. இந்த இரண்டு பிக்கப் தடங்களும் ஒரே நேரத்தில் சுமார் 28 வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடியவை. விமான நிலையத்தின் முனையத்திற்கு முன்புள்ள நடைபாதை பகுதியைச் சார்ந்துள்ள தன்மையைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தைப் பிரித்து ஒழுங்குபடுத்தவும் இந்த வசதி பெரிதும் உதவும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



