PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, Claim எங்கே வந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. உறுப்பினர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் EPFO, WhatsApp-ஐ மையமாகக் கொண்டு புதிய டிஜிட்டல் சேவைகளை கொண்டு வந்துள்ளது.
தொழிலாளர் சேமநல நிதி அமைப்பான EPFO, தற்போது அதிகாரப்பூர்வ WhatsApp Channel-ஐ தொடங்கியுள்ளது. EPFO தொடர்பான முக்கிய அறிவிப்புகள், சேவை சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை உறுப்பினர்களும் ஓய்வூதியதாரர்களும் இந்த Channel மூலம் நேரடியாகப் பெறலாம்.
EPFO-வின் அதிகாரப்பூர்வ QR Code அல்லது இணைப்பை பயன்படுத்தி WhatsApp Channel-ஐ அணுகி Follow செய்யலாம். இதன் மூலம் புதிய அறிவிப்புகளைத் தனியாக இணையதளத்தில் தேட வேண்டிய அவசியம் குறைகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக, AI தொழில்நுட்பத்தில் இயங்கும் WhatsApp Chatbot வசதியையும் EPFO அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்த பிறகு, PF கணக்கின் Balance, கடைசி 5 பரிவர்த்தனைகள், Claim Status உள்ளிட்ட முக்கிய தகவல்களை WhatsApp உரையாடல் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.
இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையும் எளிமையாக இருக்கும். EPFO-வின் Verified WhatsApp எண்ணுக்கு “Hello” என்று அனுப்ப வேண்டும். அந்த மொபைல் எண் UAN உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அமைப்பு சரிபார்த்த பிறகு, தேவையான சேவையைத் தேர்வு செய்து தகவல்களைப் பெறலாம்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு வட்டார மொழிகளில் இந்த Chatbot சேவையை பயன்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களுக்கு வசதியான மொழியில் EPFO சேவைகளை அணுக முடியும். 24 மணி நேரமும் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், PF Balance அல்லது Claim Status தெரிந்துகொள்ள ஒவ்வொரு முறையும் EPFO Portal-ல் Login செய்யும் சிரமமும் குறையும்.
ஆனால் WhatsApp மூலம் EPFO சேவைகளைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பில் கவனம் அவசியம். EPFO-வின் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட WhatsApp கணக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும். OTP, Password, ஆதார் விவரங்கள் மற்றும் வங்கி தொடர்பான ரகசிய தகவல்களை தெரியாத WhatsApp எண்களிடம் பகிரக்கூடாது.
Also Read: UPI பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்க முடியாது!



