தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சுய மருத்துவம் செய்வதை தவிர்த்து, உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருவதாக கூறியுள்ளார். அதன்படி, 2023இல் 56,863 ஆக இருந்த பாதிப்பு, 2024இல் 46,971 ஆகவும், 2025இல் 25,585 ஆகவும் குறைந்த நிலையில், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை 17,049 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு காய்ச்சல் பாதிப்பும் சுகாதாரத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அமைச்சர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மற்றும் தீவிரக் கொசு ஒழிப்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “டெங்கு குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை; அதேவேளையில் முன்னெச்சரிக்கையில் எந்தவித அலட்சியமும் காட்டக்கூடாது. வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் நன்னீரை உடனடியாக அகற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்” என்று அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
Read More : LPG சிலிண்டர் மானியம் தொடர வேண்டுமா?.. அக்டோபர் 1-க்குள் இதை செய்ய மறந்துடாதீங்க!



