2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்திய இந்திய அணி, 2-வது நாளான இன்று (செப்டம்பர் 21) மேலும் பல பதக்கங்களைக் கைப்பற்றும் நோக்கில் களம் இறங்குகிறது. 14 விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 45 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 14 பிரிவுகள் நேரடியாகப் பதக்கங்களை தீர்மானிக்கும் இறுதிப்போட்டிகளாக அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நாளின் முக்கிய சிறப்பம்சமாக, இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கபடி அணிகள் தங்களது ஆசிய விளையாட்டுப் பயணத்தைத் தொடங்குகின்றன. ஆண்கள் அணி தனது முதல் லீக் போட்டியில் ஜப்பானையும், மகளிர் அணி வங்கதேசத்தையும் எதிர்கொள்கின்றன. அதேபோல, பேட்மிண்டன் ஆண்கள் அணிப் பிரிவின் முதல் சுற்றில் இந்தியா, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
டேபிள் டென்னிஸ் களத்தில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் என இரண்டிலுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. குறிப்பாக, முதல் நாளில் ஈரானிடம் தோல்வியடைந்த ஆண்கள் அணி, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தனிநபர் மற்றும் அணிப் பிரிவுகளுக்கான பதக்கப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவின் பார்த்த் ராகேஷ் மானே, ஹிமான்ஷு தில்லான் மற்றும் ருத்ராங்ஷ் பாலாசாஹெப் பட்டீல் ஆகியோர் பதக்க வேட்டையில் ஈடுபடுகின்றனர். மேலும், மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) மகளிர் 60 கிலோ அரையிறுதியில் சிங்கப்பூர் வீராங்கனையை எதிர்கொள்ளும் இந்தியாவின் சுசிகா தரியால், வெற்றி பெற்று தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் ஹாக்கித் தொடரின் பூல் B பிரிவில் இந்திய அணி இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது. இதுதவிர வுஷு, நீச்சல், பாக்ஸிங், சாஃப்ட் டென்னிஸ் மற்றும் செபாக்டாக்ரா ஆகிய போட்டிகளிலும் இந்திய வீரர்கள் இன்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.



