பாம்புக்கு ‘சி.பி.ஆர்’ (CPR) முதலுதவி சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், குஜராத்தில் மயக்கமடைந்த ஒரு பாம்பிற்கு நபர் ஒருவர் சி.பி.ஆர் சிகிச்சை அளித்து அதைக் காப்பாற்றிய விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வாப்பியில் உள்ள ஒரு தொழில்பேட்டை பிரிவில், ரசாயனம் கலந்த நீர் தொட்டியில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று தவறி விழுந்துள்ளது. இதைக் கண்ட ஆலை ஊழியர்கள் உடனடியாகப் பாம்பு பிடிக்கும் தன்னார்வலருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அந்த விலங்கு நலத் தன்னார்வலர், ரசாயனம் கலந்த நீரில் மூழ்கி மயக்கமடைந்திருந்த பாம்பை மீட்டு, அதற்குத் தொடர்ச்சியாக வாய் வழியே காற்றைச் செலுத்தியும், அதன் நெஞ்சுப் பகுதியை அழுத்திக் கொடுத்தும் சுமார் இரண்டு நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சை அளித்துள்ளார். மேலும், பாம்பின் உடலில் படிந்திருந்த ரசாயனத்தைக் கழுவுவதற்காக அதன் மீது சுத்தமான நீரையும் ஊற்றிக் கழுவினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பாம்பு மெதுவாகச் சுயநினைவை அடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த அரிய காட்சி வீடியோவாகப் பதிவாகி இணையத்தில் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “பாம்புகளுக்கும் சி.பி.ஆர் சிகிச்சை அளிக்க முடியும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்”, “எந்த உயிரினமாக இருந்தாலும் அதைக் காப்பாற்றத் துணிந்த அந்த நபரின் மனிதநேயம் பாராட்டுக்குரியது” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.



