மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம் தொடர்பாக, அவரது கணவரான ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், மருத்துவர்களின் சந்தேகம் போலீஸ் விசாரணைக்கு வழிவகுத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணின் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபாலி மத்னே என்பவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் ஞானேஷ்வர் மத்னே, இந்திய ராணுவத்தின் 6-வது மராத்தா பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்த தீபாலி திடீரென உயிரிழந்தார். அவர் வழுக்கி விழுந்ததாகக் கூறி முதலில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
ஆனால், தீபாலியின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அவரது கழுத்தில் காணப்பட்ட காயத்தழும்புகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. இதனால், சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில், தீபாலியின் சகோதரர் ராகுல் மத்னே அளித்த புகார் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தனது சகோதரியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக தீபாலி ஏற்கெனவே துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து, தீபாலியின் கணவர் ஞானேஷ்வர் மத்னே கைது செய்யப்பட்டார். தற்போது தீபாலியின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை, கழுத்தில் ஏற்பட்ட காயங்களின் தன்மை மற்றும் தடயவியல் ஆதாரங்கள் ஆகியவற்றை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது, கொலைக்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவம் மற்றும் தடயவியல் பரிசோதனைகளின் முடிவுகளுக்குப் பிறகே மரணத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read: ரீல்ஸ் மோகத்தால் பிரியும் குடும்பங்கள்… ஒரே வீட்டில் இருந்தும் பேசிக்கொள்ளாத அவலம்!



