1980-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது நிதிப் பிரச்சினை காரணமாக குடும்ப மோதல் ஏற்பட்டுள்ளது. தனது கையொப்பமிட்ட காசோலைகளைத் தவறாகப் பயன்படுத்தி ரூ. 46 கோடி பெற முயன்றதாகச் சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது சென்னை பெருநகரக் காவல் ஆணையரிடம் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.
ராதா அளித்துள்ள புகாரின்படி, அவர் தனது தொழிலுக்காக ‘ARS கார்டன் ஸ்டுடியோ’ என்ற பெயரில் கரண்ட் கணக்கு ஒன்றை வைத்துள்ளார். தான் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும்போது ஊழியர்களின் சம்பளம், வரிகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்காகக் கையொப்பமிட்ட சில வெற்று காசோலைகளை தனது வீட்டில் வைத்துச் செல்வது வழக்கம்.
கடந்த 2025 ஜனவரி மாதம், இந்த நிறுவனத்தின் பெயர் ‘RR கார்டன்ஸ்’ என மாற்றப்பட்டதால், புதிய காசோலை புத்தகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இதனால் பழைய காசோலைகளைப் பயன்படுத்தாமல் விட்டுள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 17 அன்று, அம்பிகாவின் பெயரில் ரூ. 46 கோடி மதிப்புள்ள 5 காசோலைகள் பணமாக மாற்றுவதற்காக வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் ராதாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராதா, தான் அந்தச் சோலைகளைச் சகோதரிக்கு வழங்கவில்லை என்றும், அத்தகைய நிதிப் பரிவர்த்தனை எதுவும் நடக்கவில்லை என்றும் கூறி, உடனடியாக அந்தப் பரிவர்த்தனையை நிறுத்துமாறு வங்கியில் குறிப்பிட்டுள்ளார்.
சகோதரர் மீதும் புகார்: தன் அறையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய காசோலைகளைத் தான் இல்லாத நேரத்தில் எடுத்து, சகோதரர் மல்லிகார்ஜுனன் நிரப்பியுள்ளதாகவும், சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அம்பிகாவும் மல்லிகார்ஜுனனும் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் ராதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், குடும்பச் சொத்தில் தனக்குரிய பங்கைப் பெற விடாமல் தடுத்து வருவதாகவும், அங்குள்ள நகை மற்றும் சொத்து ஆவணங்களை அணுக முடியாமல் செய்வதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 21 அன்று சென்னை காவல் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு ராதா கேட்டுக்கொண்டுள்ளார். சினிமாவில் கோலோச்சிய காலத்தில் இருவரிடையே எந்தப் போட்டியோ பொறாமையோ இருந்ததில்லை என ராதா பலமுறை கூறியுள்ள நிலையில், தற்போது ரூ. 46 கோடி காசோலை விவகாரத்தில் சகோதரி மீதே புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



