இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் உறவு குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரோஹித் சர்மாவுடனான தனது உறவு குறித்து கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.
ரோஹித்துடனான தனது உறவு வெறும் கேப்டன் – பயிற்சியாளர் என்ற எல்லைக்குள் மட்டும் அடங்கியது அல்ல என்று விளக்கிய கம்பீர், இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும், ஒன்றாக விளையாடிய அனுபவம் இருப்பதால் இருவரின் சிந்தனைகளையும் எளிதில் புரிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து ஜியோஸ்டார் ஊடகத்தில் பேசிய கம்பீர், “ரோஹித் இந்திய அணிக்கு முதன்முதலில் வந்தபோது நான் அணியில் ஒரு மூத்த வீரராக இருந்தேன். எனவே எங்கள் உறவு அன்றிலிருந்தே தொடங்குகிறது. வெளிநாட்டிலிருந்து புதிதாக வந்த ஒரு பயிற்சியாளரைப் போல, ரோஹித்தைப் பற்றி அறிந்துகொள்ளவோ அல்லது அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ளவோ எனக்குக் கூடுதல் காலம் தேவைப்படவில்லை. ஒன்றாக விளையாடிய அனுபவம் இருக்கும்போது காரியங்கள் மிகவும் எளிதாகிவிடும். அவருக்கு எனது சிந்தனை தெரியும், எனக்கு அவரது சிந்தனை தெரியும்” என்று கூறினார்.
மேலும், சில நேரங்களில் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதை ஒப்புக்கொண்ட கம்பீர், இறுதியில் எடுக்கப்படும் முடிவு எதுவாக இருந்தாலும் அது இந்திய அணியின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியமானது என்றார்.
ஜூலை 2024-இல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல், கம்பீர் நான்கு வெவ்வேறு கேப்டன்களுடன் பணியாற்றியுள்ளார்: ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில். இந்த நான்கு தலைவர்களையும் பாராட்டிய கம்பீர், அவர்கள் அனைவருமே தங்களை விட அணி நலனுக்கே எப்போதும் முதலிடம் கொடுத்ததாகக் கூறினார்.
ஷ்ரேயாஸ் ஐயருடனான தனது நீண்ட காலப் பயணத்தைக் குறிப்பிட்ட கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவருடன் இணைந்து பணியாற்றியதையும் நினைவு கூர்ந்தார். முன்னதாக 2018-இல் டெல்லி அணிக்காக விளையாடியபோதே, ஷ்ரேயாஸிடம் தலைமைப் பண்பைக் கண்டு தான் கேப்டன்சி பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.
சுப்மன் கில்லின் கேப்டன்சி குறித்துப் பேசிய கம்பீர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைக் சுட்டிக்காட்டினார். “இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்படுவது ஒரு மிகப்பெரிய சவால். ஆழ்கடலில் தள்ளிவிடப்பட்டதைப் போன்ற சூழலிலும் கில் அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாகக் கையாண்டார். வரும் ஆண்டுகளில் சுப்மன் கில்லிடமிருந்து மேலும் சிறந்த ஆட்டத்தை நாம் காண்போம்” என்று கம்பீர் நம்பிக்கை தெரிவித்தார்.


