அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். 7 நாட்களுக்குள் நீரிணையில் வழக்கமான கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கவும் ஈரான் முன்வந்த நிலையில், அந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற்ற நியூயார்க்கில், கத்தார் இடைத்தரகராக செயல்பட்டு இந்த திட்டத்தை அமெரிக்காவிடம் ஈரான் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, 7 நாள் காலக்கெடுவுடன் கூடிய விரிவான திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்திருந்தார்.
ஈரானின் திட்டத்தின்படி, அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை தளர்த்த வேண்டும், ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை தளர்த்த வேண்டும், மேலும் பிராந்திய அளவில் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால், ஏழாவது நாளில் ஹோர்முஸ் நீரிணை வழியாக வழக்கமான கடல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று ஈரான் தெரிவித்திருந்தது.
மேலும், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையையும் மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் தயாராக இருப்பதாக அதன் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை சில நாட்களில் நிறைவேற்றி, பின்னர் நீரிணையை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் தரப்பு தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த திட்டத்தை டிரம்ப் நிராகரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் முன்வைத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறப்பதற்காகவே ஈரான் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அந்த முன்மொழிவு தனக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியமான கடல்வழிப் பாதையாக உள்ளது. இந்த நீர்வழியில் ஏற்பட்டுள்ள தடைகள் சர்வதேச எரிசக்தி விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஒவ்வொரு நகர்வும் சர்வதேச சந்தைகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டிரம்ப் இந்த திட்டத்தை நிராகரித்துள்ள நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எந்த திசையில் செல்லும் என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது. இதற்கிடையில், ஈரான் தனது திட்டத்தை அமெரிக்காவிடம் இடைத்தரகர்கள் மூலம் தொடர்ந்து முன்வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: “என் பொண்டாட்டி இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்”.. தனிக்குடித்தன பிரச்சினையில் 29 வயது கணவன் எடுத்த விபரீத முடிவு!



