நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் உடற்பயிற்சி நிலைய ஊழியர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலப்பாளையம் ஞானியாரப்பா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் (29). நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உடற்பயிற்சி நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
அப்துல்ரசாக், வல்லநாடு அருகே உள்ள மியான்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி சில காலங்களே ஆன நிலையில், 10 மாத இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு குழந்தை ஆண், மற்றொன்று பெண்.
திருமணத்திற்குப் பிறகு அப்துல்ரசாக் தனது குடும்பத்தினருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். ஆனால், தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று ஆயிஷா விரும்பியதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக சில நாட்களுக்கு முன்பு ஆயிஷா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று இரவு அப்துல்ரசாக் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் வசிக்குமாறு அவர் அழைத்துள்ளார். ஆனால், ஆயிஷா திரும்பி வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்துல்ரசாக், அதிகாலையில் தனது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் தனிக்குடித்தனம் தொடர்பான பிரச்சினையே இந்த விபரீத முடிவுக்கு காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: பெரும் அதிர்ச்சி.. ஒரே நாளில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 27 பேர் உயிரிழப்பு!



