சென்னையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது செயல்களால் தனது மகள் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
ஜெம் கிரானைட் நிறுவன அதிபர் வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வீரமணி, அவரது தோழி சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வீரமணி மற்றும் தொழிலதிபர் பிரகாஷ் தொடர்புடையதாக கூறப்படும் 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்த வழக்கின் விசாரணையை விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஐஜி தேன்மொழி தலைமையிலான குழு தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், தனது மகளின் மரணம் தொடர்பாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவி மூலம் அறிமுகம்
போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின்படி, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதாக அறிந்து கடந்த 2014-ம் ஆண்டு தனது மகளுடன் வீரமணியை சந்தித்துள்ளார். அப்போது அவரது மகள் பிளஸ் 2 படித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்ட வீரமணி, அவரை தனியார் பள்ளியில் சேர்த்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பிறகு மாணவியை அடிக்கடி தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக தனது மகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2014-ல் அளித்த புகார் என்ன ஆனது?
மகளின் மரணத்துக்குப் பின்னர், வீரமணிதான் காரணம் என சந்தேகித்து அப்போது ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், அந்த புகார் தொடர்பான விசாரணை முறையாக நடைபெறாமல், வழக்கு சந்தேக மரணமாக முடிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஐஸ்அவுஸ் காவல் நிலையம் தீக்கிரையானது. அப்போது தனது மகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்திருந்த புகார் மற்றும் ஆவணங்கள் தீயில் அழிந்துவிட்டதாக போலீசார் தெரிவித்ததாகவும் அந்த பெண் தனது தற்போதைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதால், தனது மகளின் மரணம் குறித்தும் மீண்டும் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகாரை தனியாக எடுத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் பழைய புகார் தொடர்பான ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், 2014-ம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய மயிலாப்பூர் துணை கமிஷனருக்கும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளின் மரணம் தொடர்பாக தாய் ஒருவர் மீண்டும் புகார் அளித்திருப்பது, தற்போது நடைபெற்று வரும் வீரமணி மீதான விசாரணையில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: இளைஞரை அறைந்ததாக சர்ச்சை; டெல்லி அமைச்சர் மீது ராகுல் காந்தி விமர்சனம்..



